NETamil

ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு:
தமிழ் அறிவு மரபும் அதன் பரிமாற்ற அமைப்புகளும்

Going From Hand to Hand:
Networks of Intellectual Exchange in the Tamil Learned Traditions


Tamil manuscript

செம்மொழியான தமிழ், இந்தியத் துணைக்கண்டத்தில் பழமையான கவிதைப் பாரம்பரியம் கொண்ட மொழிகளில் சமஸ்கிருதத்தோடு இடம்பெறும் சிறப்பைப் பெற்றுள்ளது. இவ்விலக்கியம் ஏறத்தாழ ஆறாம் நூற்றாண்டில் முதல் முறையாகத் தொகுப்பு வடிவம் பெற்றிருக்கலாம் என்றாலும் இவ்வடிவம் பெறுவதற்கு முன்பிருந்தே, அதாவது பொதுக் காலத்தொடக்கத்திலிருந்தே (Common Era) வழங்கி வந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளாகக் காதல், போர் பற்றிய கவிதைத் தொகுதிகளும் அவற்றை உள்ளடக்கிய கவிதைமரபுகளை விளக்கும் இலக்கியக்கொள்கை நூல்களும் பல்வேறு வகையான விளக்க உரைகளைப்பெற்று இறுதியில் இடைக்காலத்தில் சிறப்பிற்குரிய உரைகளாக உருப்பெறுகின்றன. ஆயினும், (இந்நூல்களைக் கொண்ட) நமக்குக் கிடைக்கும் பனையோலைச்சுவடிகள் 300 ஆண்டுப் பழமையுடையவை. தாள் படிகள் இதைவிடப் பழமை குறைந்தவையே. அச்சிடப்பட்ட பதிப்புகள் வேறுபாடின்றி ஒரே விதமான உரையுடன் வெளிவர, ஓலைச்சுவடிகள் திகைப்புண்டாக்கும் அளவிற்குப் பல்வேறுபட்ட புதிய இடைச்செறுகல்களை உள்ளடக்கி அமைந்துள்ளன. இவை சிறிய அளவிலான புதிய சொல் விளக்கங்களாகவும் விரிவான உரைகளில் உரைநடையிலோ செய்யுள் அமைப்பிலோ அமையும் கூடுதல் செய்திகளாகவும் அமைகின்றன.

இந்தச் சிறந்த செல்வமாகிய ஓலைச்சுவடி என்னும் மூலப்பொருள் இந்தியத் துணைக்கண்டத்தின் தட்பவெப்ப நிலையால் பாதிக்கப்பட்டு அழிந்துகொண்டே போகின்றது. இவற்றில் மிகுதியானவை இன்னும் பட்டியலிடப்படக்கூடவில்லை.

தமிழ் அறிவுலகம் எவ்வாறு செயல்பட்டது, அது இந்தியாவின் ஏனைய பகுதிகளோடு எவ்வாறு உறவுகொண்டது, ஏனைய வட்டாரங்களோடு எவ்வாறு கலந்துரையாடியது, அதே சமயத்தில், அது எவ்வாறு சிறு ஊர்களையும் அடைந்து சிறு மக்கள் குழுக்களையும் தனிநபர் நூலகங்களையும் சென்றடைந்தது: இவை அனைத்தையும் குறித்து நமக்குத் தற்போது தெரிந்துள்ள, அதிகாரப்பூர்வமான ஆனால் மிகவும் எடுத்துக்கூறப்பட்ட தகவல்கள் மிகக்குறைவே. நிலைமை இப்படியிருக்க ஒவ்வொரு ஓலைச்சுவடி நொறுங்கிப்போகும்போது அவை மேற்கூறிய விசயங்களைக் குறித்து நமக்கு மேலும் தெரிவிக்கக்கூடிய வாய்ப்புக் குறைந்துகொண்டேவருகிறது.

பாண்டிச்சேரி EFEO நிறுவனம் கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்டுள்ள மின் படியெடுத்தல் (digitization) மூலமாக மிகவும் இன்றியமையாத ஏடுகளைத் திரட்டியுள்ளது. இந்தப்பன்னாட்டு நிறுவனம் சுவடியியல், மின்படியெடுத்தல், தொகுத்தல், பிரதியை முறையான பகுப்பாய்வுக்குட்படுத்தல், பண்பாட்டு வரலாறு முதலியவற்றில் கவனம் செலுத்தும். நேதமிழின் இலக்கு என்னவென்றால், பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட தமிழ் மறுமலர்ச்சிக்கு முன்பு பல்வகைப்பட்ட செயல்பாடுகள் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புகொண்டிருந்தன, எவ்வாறு மற்றவர்க்குக் கொண்டுசெல்லப்பட்டன என்பனவற்றைப் புனரமைப்பதேயாகும். இது அச்சுப்பதிப்பு வரலாற்றுக்கு முந்தைய ஒரு காலகட்டத்திற்கான மறுபார்வையாகும்.

நேதமிழுக்கான இணையம்

ERC உயர்தர நல்கை
ஆய்வுத் திட்ட எண்: 339470